ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேச சொல்லி, சிலர் ஊருக்குள் வந்து நிர்ப்பந்தம் செய்வதாக தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் பள்ளியில் படித்துவந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாணவியை கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி தொடர்ந்து கட்டாயப்படுத்தியன் காரணமாகத் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேரைக் கொண்ட உண்மைக் கண்டறியும் குழுவை பா.ஜ.க நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில் மாணவி படித்த பள்ளிக்கூடம் உள்ள மைக்கேல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில்..
"எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் அடங்குவர். பழமையான ஊர். எங்கள் ஊர்
இந்தநாள் வரையிலும் நாங்கள் மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடனும் ஒரே குடும்பமாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தநாள் வரைக்கும் மத சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சினையும் நடந்தது இல்லை. எங்கள் ஊரில் நடைபெறுகின்ற மத சம்பந்தமான திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும் பங்கெடுப்போம்.
எங்கள் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கின்ற தூய இருதய பள்ளி 163 ஆண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கிறது. இதில் மொத்த மாணவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் இந்து மதத்தினர் பயின்று வருகின்றனர். அதேபோல் விடுதியில் இந்து மாணவியரே அதிகம் படிக்கின்றனர். இந்த பள்ளியிலும் மற்றும் ஊரிலும் மதமாற்ற முயற்சி இதுவரை நடந்ததில்லை.
இந்த சூழ்நிலையில் சில மதவாத சக்திகள் மாணவி லாவண்யாவின் மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்களூரில் சகோதரத்துடனும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்தோடு வாழ்வதை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள் நாங்கள் இதை கண்டிக்கிறோம் மற்றும் பலதரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும், விசாரிப்பதையும் தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என புகார் அளித்துள்ளனர்.