திருப்பூர் எம்எஸ் நகர் பகுதியில் மூடப்படாத சாக்கடை குழியில் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை கால்வாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் 18 வது வார்டு உட்பட்ட எம்எஸ் நகர் அருகே உள்ள பள்ளிவாசல் தெரு வி.ஆர்பி.நகரில் இதேபோல பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதன் திறப்புகள் மூடப்படாமல் இருந்திருக்கின்றன.
இந்தநிலையில் நேற்று அந்த வழியாக சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அதில் குப்புற விழுந்து உள்ளார். அதிகாலை 4 மணிக்கு அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் உள்ளே விழுந்த அவரின் கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசாருக்குு தகவல் தெரிவிக்கப்பட்டு வடக்கு போலீசார் வந்து அவரது பிணத்தை மீட்டு அவர் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர் யார் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என இன்னும் தெரியவில்லை.
பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த நிலையில் அதன் சிறப்புகள் மூடப்படாமல் இருந்தது இந்த உயிரிழப்புக்கு காரணம் என அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இறந்தவருக்கு உரிய நஷ்டஈடு தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உடனடியாக திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை பணிகளை முடித்து வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.