மலையாள நகைச்சுவை நடிகரின் மீன் அங்காடியை நடிகை பூர்ணா திருப்பூரில் திறந்து வைத்தார். நடிகையை காண ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கேரளா நகைச்சுவை நடிகர் தர்மஜன் போல்காட்டி கேரளாவில் 30 இடங்களில் ரசாயனம் கலக்காத மீன் அங்காடிகளை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை தமிழகத்திலும் விரிவுபடுத்தும் விதமாக தமிழகத்தில் புதிதாக 27 இடங்களில் மீன் அங்காடி கிளைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி தமிழகத்தில் முதல் கிளையாக திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் தர்மோஸ் ஃபிஷ் ஹப் அங்காடி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிவராஜன் என்பவர் இந்த கிளையின் உரிமையை பெற்று துவக்குகிறார்.
இந்த அங்காடியை நடிகை பூர்ணா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். உடன் நிறுவனத்தின் உரிமையாளரும் மலையாள நகைச்சுவை நடிகருமான தர்மஜன் போல்காட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று விற்பனையை துவக்கி வைத்தார்.
நடிகை ஒருவர் மீன் அங்காடி திறக்க வந்ததால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கடையில் குவியத்துவங்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் பார்வையாளர்களை வெளியேற்றினர்.