தமிழகத்தில் உள்ள 41 டாஸ்மாக் மாவட்டங்களில் 4,500க்கும் மேற்பட்ட பார்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2,600 பார்களில் தின்பண்டங்கள் விற்கும் ஏலம் நடந்து வருகிறது. இதன்மூலம் அரசுக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைக்கும். ஆனால் இது வெறும் கண் துடைப்பாகவே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது பாதியளவு பார்களுக்கு மட்டுமே டெண்டர் நடக்கிறது. வெளியாட்கள் டெண்டர் போட வந்தால் போலீசார் அனுமதிப்ப்பதில்லை என்று கூறப்படுகிறது.
முக்கியப் புள்ளிகள் மூன்று பேர் தான் தமிழகம் முழுவதும் உள்ள பார்களை ஏலம் விடும் பொறுப்பை எடுத்துள்ளனராம். இவர்கள் ஏற்பாடு செய்த நபர்களுக்கு மட்டுமே நேரில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களே ஆட்களை வைத்து ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் போட்டுள்ளனர். சரியான முறையில் டெண்டர் விட்டால் அரசுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும். மேற்குறிப்பிட்ட முறைகேடான வழியில் டெண்டர் விடப்பட்டால் பாதி வருவாய் கூட அரசுக்கு கிடைக்காது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். ஆகவே முறைகேடுகளை தடுக்க கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு தீடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,
வெளிப்படையான ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு வகிக்கும் துறையில் முன்வைக்கப்பட்டுள்ள முறைகேடு புகார்கள் ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இது ஸ்டாலினுக்கு புதிய சிக்கலை உருவாக்குமா என்பது வரும் நாட்களில் தெரியும்.