தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் எந்த கட்சியில் யார் போட்டியிடப் போகிறார்கள், வார்டுகள் எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. திருப்பூர்
மாநகராட்சியை பொருத்தவரை மாநகராட்சி எல்லைக்குள் மூன்று தொகுதிகள் வருகிறது. இதில் 21 வார்டுகள் கொண்ட திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வசம் உள்ளது. 29-வார்டுகள் கொண்ட திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வசம் உள்ளது. மேலும் 10 வார்டுகள் கொண்ட பல்லடம் தொகுதியும் அதிமுக வசம் உள்ளது.
தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக திருப்பூர் மேயர் பதவியைக் கைப்பற்றுவதற்காக தீவிர திட்டம் தீட்டி வருகிறது. அதே நேரத்தில் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதாக கூறி திருப்பூர் மாநகராட்சி பதவிகளை கைப்பற்ற அதிமுகவினரும் தீவிரமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளிலும் இன்னமும் வார்டு வாரியாக எந்த கட்சி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தெரியவில்லை.
இந்த விவரங்கள் இன்று அல்லது நாளை தெரியவரும்.
இந்த நிலையில் திருப்பூர் திமுகவில் மேயர் பதவி யாருக்கு என்பது குறித்து கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரான இல. பத்மநாபன், திருப்பூர் வடக்கு தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார், கட்சி நிர்வாகிகளான சிட்டி கணேசன், செந்தூர் முத்து உள்ளிட்டோர் பெயர்களும் அடிபடுகின்றன.
ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் இல.பத்மநாபன் மேயர் பதவி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
ஆனாலும் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொருத்தவரை வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சாதகமான தகுதிகள் என்ற அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கப்படுகின்றன எப்படி போட்டியிட்டாலும் மேயர் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் அந்தக் கட்சியினர் உள்ளனர். இது தொடர்பாக அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்றும் நடக்கிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை திருப்பூர் தெற்கு தொகுதியில் கடந்த ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்த சு.குணசேகரன், முன்னாள் எம்பி சிவசாமி, கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார் உள்ளிட்ட பெயர்கள் பேசப்படுகின்றன. இந்த போட்டியில் முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் முன்னணியில் இருக்கிறார். ஏற்கனவே நடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வாய்ப்பை இழந்தவர் குணசேகரன். மேலும் கட்சித் தலைமை இடத்திலும் மண்டல பொறுப்பாளரான எஸ் பி வேலுமணி மற்றும் மாவட்ட செயலாளரான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் இடம் நல்ல தொடர்பில் இருப்பதால அவரே மேயர் பதவிக்கு வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என அதிமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.
அதிமுக வார்டுகளை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவிலே இருக்கும் எனக் கூறப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி அதிமுக தனக்கு சாதகமான தொகுதியாக கருதுகிறது. எனவே குறைந்த அளவு கூட்டணிக் கட்சிக்கு கொடுத்து விட்டு பெரும்பாலான இடங்கள் அதிமுக போட்டியிடும் என பேச்சு அடிபடுகிறது.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் யார் மேயர் வேட்பாளராக களமிறக்க படுவார்கள் என்பதும், வார்டுகளில் யார் எல்லாம் போட்டியிடுவார்கள் என்பதும் நாளை மாலைக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.