திருப்பூர் அம்மா பாளையத்தில் புகுந்திருந்த சிறுத்தை அங்கு இரண்டு பேரை தாக்கிய நிலையில் பனியன் கம்பெனிக்குள் பதுங்கி இருந்தது. வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றதால் அங்கிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து பின்பக்கம் உள்ள சோளக்காட்டில் தஞ்சம் அடைந்திருந்தது.
சோள காட்டில் புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு வனத்துறையினர் கண்டுபிடித்து மயக்க ஊசி போட்டு பிடித்தார்கள். இதற்குள்ளாகவே வன அலுவலர் ஒருவரை சிறுத்தை தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுத்தையை பிடித்து கூண்டில் ஏற்ற வனத்துறையினர் உயிரை பணையம் வைத்து பணியாற்றினார்கள். அம்மா பாளையத்தில் பிடிபட்ட சிறுத்தையை பார்ப்பதற்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு இருந்தனர்.
மயக்கநிலையில் கூண்டில் ஏற்றப்பட்டு சிறுத்தை வனப்பகுதியில் விடுவதற்காக பொள்ளாச்சி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் சென்றபது சிறுத்தைக்கு மயக்கம் தெளிந்து கூண்டுக்குள் தாறுமாறாக அலைமோதியது.
கூண்டுக்குள் இருந்து வெளிவருவதற்காக படாத பாடு பட்டது. ஒருவழியாக வனத்துறையினர் சிறுத்தையை அப்பர் ஆழியாறு அருகிலுள்ள காடாம்பாறை காப்பு காட்டிற்குள் விட்டார்கள்.
கூண்டைத் திறந்து விட்ட பின்னரும் ஒரு சில நொடிகள் உள்ளேயே இருந்த சிறுத்தை ஒரே பாய்ச்சலில் காட்டுக்குள் தாவிச் சென்றது.
பிடிபட்ட சிறுத்தை நான்கு வயது மதிக்கத்தக்க சிறுத்தை என்றும் 70 கிலோ அளவு எடை உள்ளது எனவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
நான்கு நாட்களாக விடிய விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு பல சிரமங்களுக்கிடையில் சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் விட்ட வனத்துறை அலுவலர்களை திருப்பூர் பொதுமக்கள் பாராட்டுகிறார்கள்.