பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல டாஸ்மாக் கடை அமைப்பதா? எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் மாநகராட்சிப்பள்ளி அருகில், புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினர் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கியதுடன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி புதிய 42 வது வார்டுக்குட்ப்பட்ட  பாரப்பாளையத்தில் உள்ள மாநகராட்சிப்பள்ளி அருகில், புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கப்பதற்கான பணிகளை அதிகாரிகள் செய்து வருவதாக அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கக் கூடாது என கூறி, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பா.ஜ.க., பிரச்சாரக்குழு தலைவர் சுப்புராஜ்,  மண்டல பொதுச் செயலாளர் செல்வம், மண்டல துணை தலைவர் தெய்வேந்திரன் தேமுதிக சார்பில் பகுதி கழக செயலாளர் பார்த்திபன், தெய்வேந்திரன், கணேஷ், மகாராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் முருகானந்தம், வெல்டிங் சுகுமார், பாரப்பாளையம் நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் சுரேஷ் உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் பொதுமக்களுடன் திரண்டு பாரப்பாளையம், திருநகர் பகுதிகளில் மேற்படி டாஸ்மாக் மதுபானக்கடை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ்கள் வழங்கினார்கள். மேலும், டாஸ்மாக் மதுபானக் கடையானது அமைய உள்ள இடத்தில் நின்று ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கூறுகையில், ‘ பாரப்பாளையத்தில் நடுநிலைப்பள்ளிக்கு அருகிலும், மாகாளி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள இந்த இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதாக தகவல் வந்துள்ளது. அப்படி அமைத்தால் அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள், பஸ் ஸ்டாப்புக்கு வரும் பெண்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிறைய பிரச்சினை உருவாகும். 

எனவே இந்த இடத்தில் நிச்சயம் மதுபானக்கடை அமைக்கக் கூடாது. இதற்காக திருப்பூர் டாஸ்மாக் மண்டல அதிகாரி, போலீசாரிடம் மனு அளித்து இருக்கிறோம். ஏற்கனவே,  42 வது வார்டில் பொதுமக்களுக்கு இடையூறாக  இருந்த டாஸ்மாக் மதுபானக்கடைகளை  பொதுமக்களுடன் இணைந்து போராடி அகற்றி இருக்கிறோம். இந்த வார்டில் உள்ள 1927 என்ற எண்ணுடைய டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டி சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு அளித்து இருக்கிறோம்.

 இந்த வார்டுதொழிலாளர்கள், மக்கள் நெருக்கம் நிறைந்த குடியிருப்பு பகுதியாக உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. அதையும் மீறி அமைத்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். என்றார்.


Previous Post Next Post