தூத்துக்குடியில் கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்காமணி மகன் கல்யாணசுந்தரம் (56). தூத்துக்குடி சுங்க அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் கடந்த 25.07.2021 அன்று வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்று 30.07.2021 அன்று காலை கல்யாணசுந்தரம் மட்டும் சென்னையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கபட்டு, பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள் திருடுபோயிருந்தது.
இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக ரூரல் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமைக் காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜா, மகாலிங்கம், சாமுவேல், காவலர்கள், முத்துப்பாண்டி, செந்தில்குமார், திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் கல்யாணசுந்தரம் வீட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விருதாச்சலம் சந்துகடல் சின்னபையன் மகன் பாலகிருஷ்ணன் (40), தாழையூத்து, சங்கர்நகர், சங்கரன் மகன் மகாராஜன் (எ) சையின்டிஸ்ட் மகாராஜன் (26), விருத்தாச்சலம் கோபூவானூர், ஆறுமுகம் மகன் அய்யப்பன் (35), என்பது தெரியவந்தது.
இவ்வழக்கில் ஏற்கனவே 3 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் 4வது முக்கிய எதிரியாக நாங்குநேரி சிவபெருமாள் சுரேஷ் (எ) ஜுட்டு சுரேஷ் (32) என்பவரும் கூட்டுக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் (எ) ஜுட்டு சுரேஷ் என்பவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.