பாஜக சொத்து மதிப்பு ரூ 4,847 கோடி.! - காங்கிரஸ் 588 கோடி - ADR அமைப்பு தகவல்..!


ரூ 4,847 கோடி சொத்து மதிப்புடன் நாட்டிலேயே பணக்கார கட்சியாக பாஜக உள்ளதாக ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, அவற்றின் சொத்து உள்ளிட்ட தகவல்களை வெளியிடும்.

அதன்படி இந்த ஏடிஆர் அமைப்பு 2019-20ஆம் நிதியாண்டிற்கான தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

நாட்டில் மொத்தம் இருக்கும் 7 தேசிய கட்சிகள் மற்றும் 44 பிராந்திய கட்சிகளின் சொத்து விவரம், நிதி உள்ளிட்ட தகவல்களை இந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இப்போது வெளியிட்டுள்ளது. தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக பாஜக ரூ. 4847.78 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. இது அனைத்து தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 69.37%ஆகும்.

அதைத் தொடர்ந்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ரூ. 698.33 கோடி, அதாவது 9.99 சதவீதத்துடன் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பல முறை ஆண்ட காங்கிரஸ் இந்தப் பட்டியலில் 3ஆவது இடத்தை தான் பிடித்துள்ளது. அக்கட்சிக்கு ரூ 588.16 கோடி சொத்துகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 7 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பைச் சேர்ந்தால் அது ரூ 6,988.57 கோடியாக உள்ளது.

பிராந்தியக் கட்சிகளில் உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி அதிகபட்சமாக ரூ.563.47 கோடியுடன் (26.46 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது. அதேபோல சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ரூ.301.47 கோடியுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் அதிமுக ரூ.267.61 கோடியுடன் 3ஆம் இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த சொத்துகளில் எஃப்டிஆர் எனப்படும் நிலையான வைப்புத்தொகை மூலமே அரசியல் கட்சிகளுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. அரசியல் கட்சிகளின் நிதியில் மொத்தம் ரூ.1,639.51 கோடி இப்படி வைப்புத்தொகையாக உள்ளது. அதில் பாஜகவுக்கு ரூ.3,253.00 கோடியும், பகுஜன் சமாஜுக்கு ரூ.618.86 கோடியும், காங்கிரஸ் ரூ.240.90 வைப்பு தொகையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியக் கட்சிகளில், சமாஜ்வாடி ரூ. 434.219 கோடி, டிஆர்எஸ் ரூ. 256.01 கோடி, அதிமுக ரூ. 246.90 கோடி, திமுக ரூ. 162.425 கோடி, சிவசேனா ரூ. 148.46 கோடி, பிஜு ஜனதா தளம் ரூ. 118.425 கோடி ஆகியவை வைப்பு நிதி மூலம் தங்கள் சொத்துகளைப் பெற்றுள்ளன.

Previous Post Next Post