தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிய பெண்ணிடம் குலுக்கல் முறையில் பரிசு விழுந்துள்ளதாக கூறி ரூபாய் 46,000/- பணத்தை ஏமாற்றி மோசடி செய்த மூன்று நபர்கள் சைபர் குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மெயின் ரோடு கோவில்பட்டியில் வசிக்கும் ஜெயா, (க/பெ. செல்வராஜ் )என்பவர் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11.07.2021 அன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மாடசாமி மற்றும் ஐயப்பன் என்றும் எங்களிடம் குக்கர், நான்ஸ்டிக் தவா, பணியாரக்கல் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும், அதை வாங்கிக்கொள்ளுமாறும், பொருள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு விழும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய ஜெயா என்பவர் 5 பொருட்களை ரூபாய் 3,800/-க்கு வாங்கியுள்ளார். விற்பனை செய்தவர்கள் ஜெயாவிடம் பரிசு விழுந்தால் உங்களை தொடர்பு கொள்ள உங்களது பெயர் முகவரி மற்றும் செல்போன் எண் வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டனர்.
பின்னர் கடந்த 24.07.2021 அன்று அவர்கள் ஜெயாவிடம் செல்போனில் பேசி உங்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பரிசாக ஒரு இருசக்கர வாகனமும், 6 சவரன் தங்க நகையும் பரிசாக விழுந்துள்ளதாக ஜெயாவிடம் கூறி, இரு சக்கர வாகனத்திற்கு ஜி.எஸ்.டி வரியாக ரூபாய் 12,500/-ம், 6 சவரன் தங்க நகைக்கு ஜிஎஸ்டி வரியாக ரூபாய் 22,600/-ம் கட்ட வேண்டும் என்று கூறியதை நம்பி ஜெயா மேற்படி அவர்கள் கேட்ட பணத்தை வங்கி கணக்கு மூலம் அவர்களுக்கு அனுப்பி உள்ளார்.
பின்னர் அவர்கள் 27.07.2021 அன்று உங்களுடைய இருசக்கர வாகனம் மற்றும் 6 சவரன் தங்க நகை பரிசு கேரளா எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் இருப்பதாகவும் ரூபாய் 10,900/- ஜிஎஸ்டி வரி செலுத்தினால் தான் வீட்டிற்கு வரும் என்று கூறியதை நம்பி மேற்படி ஜெயா மேலும் ரூபாய் 10,900/-த்தையும் அனுப்பியுள்ளார். மொத்தம் ரூபாய் 46,000/- பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பிறகு அவர்கள் ஜெயாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களுடைய பரிசுப்பொருட்கள் நாளை உங்கள் வீட்டிற்கு வரும் என்று கூறியுள்ளனர். ஆனால் எதுவும் வரவில்லை, அவர்களை அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி ஜெயா கடந்த 02.08.2021 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன்க்கு உரிய நடவடிக்கை எடுத்து மோசடி செய்த நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி குடிசை மாற்று வாரிய காலனியைச் சேர்ந்தவர்களான 1) ஆனந்தராஜ் (25), த/பெ. நடராஜன், 2) ஐயப்பன் (29), த/பெ. ஆத்தியப்பன் மற்றும் 3) மாடசாமி (27), த/பெ. தங்கையா ஆகிய 3 பேர் என்பதும் தெரியவந்தது.
அதனடிப்படையில் அவர்களை தேடி வந்த சைபர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் (27.01.2022) கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்படி நபர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருச்சக்கர வாகனங்களையும், ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.