370 நாட்டுக்கோழிகளை திருடிய மர்மநபர்கள்!! - வழக்கு பதிந்து குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!


தூத்துக்குடி கோழிப்பண்ணையில் திருடு போன  ரூ.1லட்சம் மதிப்புள்ள 370 நாட்டுக் கோழிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை, உடனடியாக வழக்கு பதிந்து பிடிக்க போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி முள்ளக்காடு கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் சாமுவேல் ஞானதுரை (57) காங்கிரஸ் பிரமுகரான இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் கடந்த 13.8.2021 அன்று மர்ம நபர்கள் நுழைந்து 370 நாட்டுக் கோழிகளை திருடி சென்றுவிட்டார்களாம். இதன் மதிப்பு ரூ 1லட்சம் ஆகும். 


இதுகுறித்து அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து சாமுவேல் ஞானதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்யும்படி முத்தையாபுரம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். 

அதன் பேரில் முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் மகராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி வருகிறார்.

Previous Post Next Post