குஜராத் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதி 3,063 கோடி ஒதுக்கீடு.! – தமிழகம் புறக்கணிப்பு திட்டமிட்ட செயலா ?


2021ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ 3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும் 6 மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களுக்குப் பொங்கல்ரொக்கமாக வழங்குவதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் ஆதரவை தடுப்பதே நோக்கம் என திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு டாக்டே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கு ரூ.1,133.35 கோடி, யாஸ் சூறாவளியால் 2021ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்திற்கு ரூ.586.59 கோடி, 2021 தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளுக்காக அசாம் மாநிலத்துக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ 187.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

“இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும். 2021-22ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விடுவித்த இந்த நிதியை பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 534.6 மி.மீ மழை பெய்தது. வழக்கமான சராசரிய விட இது அதிகமாகும். இயல்பை விட 61 சதவீதம் அதிக மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் கடுமையான சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவும் பார்வயிட்டு சென்றுள்ளது. மேலும், வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கவும் விரைவில் நிதி வழங்கிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப்பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி விடுவித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்களில் தமிழகம் இல்லாதது சர்ச்சையாகியுள்ளது.

இது குறித்து திமுக தரப்பில் கூறுகையில் “பாஜக ஆளும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும் 6 மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது. இது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. நிதி நெருக்கடியில் உள்ள திமுக அரசு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசின் நிவாரணத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களுக்குப் பொங்கல் ரொக்கமாக வழங்குவதன் மூலம் பெருவாரியான மக்கள் ஆதரவைப் பெறும் என்று பாஜக நினைத்திருக்கலாம். இதனால், தமிழகத்துக்கு வரும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக வர வாய்ப்புள்ளது.” என்றார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post