மீரட்: டிசம்பர் 3 ஆம் தேதி சஹாரன்பூரில் உள்ள சேத் பல்தேவ் தாஸ் பஜோரியா மாவட்ட மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நடந்த கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட 27 பேருக்கு 3 வாரங்களுக்கு பிறகு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது, அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 27 பேர், மூன்று வாரங்களுக்குப் பிறகு மொத்தமாக பார்வையை இழந்தது, அறுவை சிகிச்சையில் ஏதோ தவறு நடந்திருப்பதை காட்டுவதாக, சஹாரன்பூர் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) சஞ்சீவ் மங்கலிக் புதன்கிழமை டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையின் மூத்த கண் அறுவை சிகிச்சை நிபுணரை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
சேத் பல்தேவ் தாஸ் பஜோரியா மருத்துவமனையில் தரமற்ற லென்ஸ்கள் பயன்படுத்தப்படுவதாக நோயாளிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். 27 நோயாளிகளில் ஐந்து பேர் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (பிஜிஐ) மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமூக ஆர்வலரான நிபுன் பரத்வாஜ், அறுவைசிகிச்சைக்குப் பிறகு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேரை பிஜிஐ சண்டிகர் மற்றும் புதுதில்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உதவினார். "அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அனைவருமே பார்வையை இழந்தனர்," என்று பரத்வாஜ் கூறினார்.
தற்போது ஐந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் PGI இன் மருத்துவர்கள், வந்தவர்கள் அனைவரும் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
அறுவைசிகிச்சையின் போது ஏதோ தவறு நடந்திருப்பது போல் முதன்மையாகத் தோன்றியதாக மருத்துவர்கள் TOI இடம் தெரிவித்தனர். “சஹாரன்பூரில் இருந்து கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் தொற்று ஏற்பட்ட நிலையில் ஐந்து நோயாளிகளை நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களில் மூவருக்கு நாங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளோம், இரண்டு பேருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படும்,” என்று பிஜிஐ சண்டிகரில் உள்ள மூத்த கண் மருத்துவர் கூறினார்.
“மருத்துவர்கள் குழுவினால் இந்த வழக்கை விசாரிப்போம். நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக நாங்கள் தனியார் மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தின் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவர்களை ஈடுபடுத்தியுள்ளோம்” என்று சிஎம்ஓ மங்கலிக் கூறினார்.
அறுவை சிகிச்சை செய்த டாக்டர் எஸ் லால், டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் பல முறை தொலைபேசியில் அழைக்கப்பட்ட போதும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.