கோபி மார்க்கெட்டில் 100 ஆண்டு கால பழமையான மரம் வேறு இடத்திற்கு மாற்றம்.!


கோபி நகராட்ச தினசரி மார்க்கெட்டில் இருந்த 100 ஆண்டு கால பழமையான மரங்கள் 2 லட்சம் ரூபாய் செலவில்  வேரோடு அகற்றப்பட்டு சாந்தி திரையரங்கு அருகே நகராட்சிக்குட்பட்ட இடத்தில் மறு நடவு செய்யப்பட்டது.

கோபி நகராட்சியின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


கோபி நகரின் மைய பகுதியான தினசரி மார்க்கெட்டானது கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இந்த தினசரி மார்க்கெட் தொடங்கிய போது நினைவாக அரச மரம், நாவல் மரம் உள்ளிட்ட பல வகை மரங்கள் வளர்க்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த இடத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்நிலையில் கடந்த மாதம் புதிய வணிக வளாகம் கட்டவும் பூமி பூஜை போடப்பட்டது.  அந்த இடத்தில் இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டாலும்,  அங்கு இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதில்  நகராட்சிக்கு உடன்பாடு இல்லாத நிலையில், அந்த மரங்களை வேறுடன் பிடுங்கி எடுத்து வேறு இடத்தில் மறு நடவு மூலமாக மரங்களை காக்க நகராட்சி முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மரங்களை அகற்றி வேறு இடத்தில் மறு நடவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


7 மரங்களையும் அகற்றி வேறு இடத்தில் நடவு செய்ய சுமார் 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில் தனியார் நிறுவனம் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டது.

அதைத்தொடர்ந்து ஏற்கனவே மரங்களை அகற்றி வேறு இடத்தில் வைத்து வளர்த்து தரும் ஈரோடு சிறகுகள் என்ற அமைப்பின் தன்னார்வலர்கள் 15 பேர் உதவியுடன் இன்று காலை முதல் மரங்களை வேறுடன் அகற்றி மறு இடத்தில் நடவு செய்யப்பட்டு வருகிறது.

சுமார் 25 டன் எடையுள்ள மரங்களை தன்னார்வலர்கள்  ஆர்வமுடனும் தன்னம்பிக்கையுடனும் மரங்களை மறு நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சியின் இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

Previous Post Next Post