செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதியின்றி இ-பேப்பர்கள், பி.டி.எப்.,களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்கள், புத்தகங்களை பி.டி.எப்.,ஆக மாற்றி வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்பவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999 ஆகியவற்றின் படி, தனிநபர்கள் இ-பேப்பர்களை அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். அதன்படி, சமூக வலைதள குழுக்களில் செய்தித்தாள்களை பகிர்வதை எதிர்த்து பல செய்தித்தாள் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
ஹிந்தியில் வெளியாகும் டெய்னிக் பாஸ்கர் என்னும் செய்தித்தாள் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தங்களது செய்தித்தாளின் இ-பேப்பரை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதாக குறிப்பிட்டு, 85 குழுக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், இ-பேப்பர்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்ஆப் குழுக்களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அடுத்தாண்டு மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#PDF #DelhiHighCourt