கொரோனா துவங்கிய காலம் முதல் பொதுமக்கள் அனுபவித்து வரும் அவதிகள் சொல்லி மாளாது. நாளுக்கு நாள் ஒவ்வொரு விதமான துன்பத்துக்கு ஆளாகிறோம். அந்த வகையில் நம்மை பெரும் சிரமத்துக்கு ஆளாக்கிய விஷயங்களில் போக்குவரத்து பிரச்சினையும் ஒன்று.
கொரோனா பரவலை தடுக்க ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டும் தான் பயணிக்க முடியும் என்று அறிவித்தார்கள். இது சாமானிய மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. இரண்டு ஆண்டுகளாக பயணம் செய்ய வேண்டிய காலங்களில் ஏழை, எளிய மக்கள் ரயில் முன் பதிவுக்காக பெருமளவு அவஸ்தை பட்டனர். அவசரத்துக்கு செல்பவர்கள் ரயிலில் ஏற முடியாத நிலை இருந்தது.
இந்த சூழ்நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மீண்டும் ரிசர்வேஷன் இல்லாத பெட்டிகளை இயக்குகிறதாக தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.
தென்னக இரயில்வே அறிவிப்பின்படி, ரயில் எண் 22609 மற்றும் மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் இரண்டு சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
ரயில் எண்: 16844 மறுமார்க்கமாக பாலக்காடு டவுனில் இருந்து திருச்சிராப்பளளி சென்று வரும் பாலக்காடு எக்ஸ்பிரஸில் 2 சாதாரண முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
ரயில் எண் 16607 மறுமார்க்கமாக 16608, கண்ணனூரில் இருந்து கோவை சென்று வரக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 2 சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
ரயில் எண்:16324 மறுமார்க்கமாக 16323, மங்களூர் சென்டிரல் முதல் கோவை ஜங்சன் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 2 சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
ரயில் எண்:16321 மறுமார்க்க்கமாக 16322, நாகர் கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 2 சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்கள் அனைத்திலும் நாளை (ஜன.1) முதல் சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் ரயில் எண்:12679 மறுமார்க்கமாக 12680, கோவையிலிருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 1 சாதாரண முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது. இது வருகிற 14 ஆம் தேதி முதல் சாதாரண பெட்டி இணைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அவதியை தீர்க்க அனைத்து ரயில்களிலும் சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும், சாதாரண டிக்கெட்டுகளை வழங்கி பொதுமக்கள் பயன்பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது.