டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்
மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகள் மூடப்பட வேண்டும்
பொதுப் போக்குவரத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க மட்டுமே அனுமதி
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக Graded Response Action Planஇன் கீழ் டெல்லி முழுவதும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்க முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், கேளிக்கை பூங்காக்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், வெளிப்புறங்களில் யோகா செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகள், மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம், மரணம் தொடர்பான நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மாற்று நாட்களில் திறக்கப்பட வேண்டும். ஆட்-ஈவன் திட்டத்தின்படி, மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு ஒரு வாரச் சந்தை மட்டும் அதுவும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகள் மூடப்பட வேண்டும். மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. ஆனால், வழக்கமான பூஜைகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில், கொரோனா நேர்மறை விகிதம் 0.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. எனவே ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்க முடிவு செய்யப்பட்டதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.