தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக, சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, முத்தம்மாள் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. சுமார் ஒரு வாரமாக மழை வெள்ளம் வடியாத நிலையில் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து பகல் 12.30 மணி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு 1.50க்கு வருகை தருகிறார். பின்னர் அவர், நகரின் பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.