தூத்துக்குடி அருகே பெண்ணிடம் தங்க நகை பறிக்க முயன்ற ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள நடுக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்செல்வி (40). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென்று பொன்செல்வி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது அவர் சத்தம் போட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து பொன்செல்வி புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி (பொறுப்பு) ஜெயராஜ் மேற்பார்வையில், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துவீரப்பன், பாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், புதுக்கோட்டை அருகே உள்ள பொட்டலூரணியை சேர்ந்த ஆறுமுக பெருமாள் மகன் முத்துக்குமார் (27) என்பவர் பொன்செல்வியிடம் நகை பறிக்க முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முத்துக்குமாரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முத்துக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து காவலர் முத்துக்குமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.