தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோமதி விநாயகம் (வயது 38). இவருடைய மனைவி கிருஷ்ணஜெயந்தி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பாவூர்சத்திரத்தில் நெல்லை-தென்காசி ரோட்டில் எங்களுக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அங்கு ஒரு கடையில் எனது கணவர் கோமதி விநாயகம் நகைக்கடை நடத்தி வருகிறார். அங்குள்ள வாடகை கடை ஒன்றில் நிதி நிறுவனம் நடத்தி வந்த பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தைச் சேர்ந்த தங்கத்துரை (47), அவரது மனைவி செல்வசர்மிளா ஆகியோர் எங்களது நகைக்கடை அபிவிருத்திக்காக, வணிக வளாகம் பெயரில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறினர்.
எங்கள் கிரைய ஆவணத்தை பார்த்த வங்கி மேலாளர் முதலில் கடன் தருவதாக கூறினார். பின்னர் சில தினங்களில் கடன் தர மறுத்து விட்டார். இதையடுத்து எங்களது நெருக்கடி நிலையை பயன்படுத்தி, தங்கத்துரையின் பெயருக்கு கிரைய ஆவணம் பெயரளவில் மாற்றம் செய்து கொடுத்தால், அதன் அடிப்படையில் அவரது பெயருக்கு கடன் வழங்கலாம் என கூறி, தங்கத்துரை, அவரது மனைவி செல்வசர்மிளா ஆகியோர் பெயருக்கு தந்திரமாக கிரையம் பதிவு செய்துள்ளனர்.
அதன்பிறகு எங்களுக்கு கடனாக கிடைத்த ரூ.95 லட்சத்துக்கு அசலும், வட்டியும் என சேர்த்து ரூ.1 கோடியே 78 லட்சம் கொடுத்துள்ளோம். அந்த தொகையை பெற்றுக்கொண்டும், வணிக வளாகத்தை எங்களிடம் எழுதி தர மறுத்து வருகிறார். மேலும் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு செல்லும் 2 செண்ட் இடத்தையும் நான் எழுதி கொடுத்தது போல போலியாக அக்ரிமெண்ட் தயார் செய்துள்ளனர்.
இந்த கந்து வட்டி கொடுமையால், எங்களது வணிக வளாகம் அபகரிக்கப்பட்டதால் மனமுடைந்து எனது கணவர் கோமதி விநாயகம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். எனவே கந்து வட்டி கேட்டு வணிக வளாகத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி, கந்து வட்டி கேட்டு, வணிக வளாகத்தை அபகரித்த வழக்கில் தங்கத்துரையை கைது செய்தனர்.
கந்து வட்டி வழங்கில் நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.