ஒப்பந்த பணிகளுக்குரிய தொகையை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேட்டி.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் 2016-2017 திட்டத்தின் கீழ் 60 கோடி மதிப்பில் நகராட்சி 36 வார்டுகளில் உள்ள 462 பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன 

இதில் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது  இதில் தெற்கு பஜார் பகுதியில் 2 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது  இப்பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, வழக்கறிஞர் பழனி குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெமினி என்ற அருணாச்சலம், ரவி, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,13.வார்டு செயலாளர் ஆரோக்கியராஜ், வார்டு பிரதிநிதிகள் செந்தில்குமார், முத்துப்பாண்டி, பாலமுருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் 

பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டம் நடத்தி தாமதமில்லாமல் நிதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பரிசீலிப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதே கருத்தை சட்டமன்றத்தில் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். அப்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறி வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுகிறதோ அதே போல் இதனை நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை பின்னர் தான் பார்க்க வேண்டும். 

ஆனால், ஒப்பந்ததாரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பணிகள் செய்து முடிப்பதில் காலதாமதத்தை தவிர்க்க வேண்டுமென்றால், ஒப்பந்த பணிகளுக்குரிய தொகையை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன்.

என்றைக்கு திமுக வந்தாலும் தீவிரவாதம் தன்னால் தலையெடுக்கும். அது என்னமோ தீவிரவாதத்துக்கும், திமுகவுக்கும் ஒரு ராசி. 1991-ல் இங்கு பிரச்சாரத்துக்கு வந்த ராஜிவ்காந்தி தீவிரவாதத்தால் கொலை செய்யப்பட்டார். அவர் செல்லாத நாடுகள் கிடையாது. 

விடுதலை புலிகள் தொடர்புடைய லண்டன் என்று சொன்னார்கள். அவர் இலங்கை, லண்டனுக்கு சென்று வந்தார். அங்கெல்லாம் நடக்காத தீவிரவாதம் இங்கே நடைபெற்றது. அதே போல் கோவை குண்டுவெடிப்பு. 

கடந்த 10 ஆண்டு காலம் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. தீவிரவாதம் என்பதற்கு இடமே இல்லை. ராணுவமே பிடிக்க முடியாத வீரப்பனை சுட்டுக்கொன்று பிடித்த பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கே சாரும். 

திருட்டு விசிடிக்கு ஒரு சட்டம். லாட்டரி சீட்டு ஒழிப்பு, கந்து வட்டி கொடுமைக்கு சட்டம் என கொண்டு வந்த காரணத்தால் அன்று சட்டம் ஒழுங்கு மிகச்சரியாக இருந்தது. ஆனால், இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

எங்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் கூட பெருமைப்படும் அளவுக்கு சிறப்பான ஆட்சி நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் கூறுகிறார். அவர் சொல்வதை செயலில் காட்டினால் நன்றாக இருக்கும்.

நகை கடன் தள்ளுபடி குறித்து பொதுமக்களே கேட்கின்றனர். ஆனால், 5 பவுன் வரை எந்தவித நிபந்தனையின்றி நகைக்கடன் தள்ளுபடி என நாங்கள் கூறினோம். ஆனால் இவர்கள் நாங்கள் வந்தால் 6 பவுன் என்று கூறினார்கள். ஆனால், இன்று 6 பவுன் இல்லை, 5 பவுன் தான். 

இந்த 5 பவுனில் கூட பல்வேறு நிபந்தனைகளை வைத்து, 75 சதவீத பயனாளிகள் பயன்பெறாத வகையில் உள்ளது. 5 பவுன் என்றால் நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் அடகு வைத்திருப்பார்கள். 

எனவே, இதனை கருத்தில் கொண்டு, இந்த அரசு ஆராய்ந்து எந்தவித நிபந்தனையும் இல்லாமல் 100 நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை, என்றார் அவர்.

Previous Post Next Post