முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம விழா!


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 1978ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களிலேயே முதலாவதாக துவக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளி இது ஆகும்.

இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம விழா இம் மாதம் 27ஆம் நாள் திங்கட்கிழமை மாலையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  நுழைவிடத்திலேயே மாணவர்கள் வருகை பதிவு செய்யப்பட்டனர். கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. முன்னாள் மாணவர் எம்.எம். முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

பள்ளியின் துணைத் தலைவர் ஏ.கே. செய்யித் வரவேற்றார். முன்னாள் மாணவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் விழா அறிமுகவுரை ஆற்றினார். 

பள்ளி துவங்கியது முதல் இதுநாள் வரையிலான நிகழ்வறிக்கை, வருங்கால செயல்திட்டங்கள் குறித்து முன்னாள் மாணவர் முனைவர் எம்.என். முஹம்மத் லெப்பை விளக்கிப் பேசினார். 

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலீ, புதுக்கல்லூரியின் அரபி மொழித் துறை பேராசிரியர் முனைவர் அஹ்மத் இப்ராஹீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினர்.

முன்னாள் மாணவர் மன்ற புதிய கட்டமைப்பு குறித்து முன்னாள் மாணவர் எம்.எம். மொகுதூம் முஹம்மத் விளக்க, அனைவரின் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளும், செயற்குழுவினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் விழாவில் பரிசளித்து கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போட்டிகளில் வென்றவர்களுக்கும், கூட்டத்தில் பங்கேற்றோரில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டும் நிழற்படங்கள் அனைவருக்கும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

முன்னாள் மாணவர் மன்றத்தின் புதிய பொருளாளர் கே.எஸ்.டீ. முஹம்மத் அஸ்லம் நன்றி கூற, துஆவைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. அனைவருக்கும் விழா அரங்கிலேயே இரவு உணவு விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அன்று காலையில் - பள்ளியின் பெண்கள் பிரிவு முன்னாள் மாணவியர் சங்கம விழா நடைபெற்றது. வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் எஸ்.என். சித்தி ஷாமிலா, மதுரை கிரசன்ட் கலைக் கல்லூரியின் முதல்வர் மணிமேகலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவியர் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

#kayal #காயல்பட்டினம்

Previous Post Next Post