கடந்த ஏப்ரல் மாதம் 10 தமிழக மற்றும் அந்தமான் மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்ற மீன்பிடி விசைப்படகு காற்றின் வேகத்தால் மியான்மார் பகுதிக்குள் இழுத்து செல்லப்பட்டது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த மியான்மர் கடற்படை 10 இந்திய மீனவர்களையும் படகையும் கைது செய்து சிறைப்படுத்தியது. இதைத்தொடர்ந்து 10 இந்திய மீனவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கடந்த நவம்பர் 23 அன்று இந்திய மீனவர் கூட்டமைப்பு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருசோத்தம ரூபால அவர்களை சந்தித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் மியான்மார் சிறையில் உள்ள 10 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் இந்திய மனித உரிமை ஆனையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மீனவர் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் துரித நடவடிக்கையால் நவம்பர் 30 மியான்மார் அரசு மீனவர்களை விடுவித்து இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தது.
இதன் அடிப்படையில் டிசம்பர் 2 மீனவர்கள் டெல்லி வருவதாக மீனவ கூட்டமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எப்போது வருவார்கள் என்ற விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். இதனால் மீனவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்ப்பட்டது.
அதன்படி டிசம்பர் இரவு மியான்மரில் இருந்து வந்த விமானத்தில் 10 இந்திய மீனவர்களும் டெல்லி விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய மீனவர்களை அழைத்துச்செல்ல யாரும் வராததால் திக்கு தெரியாமல் அனாதையாக விமான நிலையத்தில் இருந்திருக்கிறார்கள்.
இவர்கள் வரும் நேரம் குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படாததால் இவர்கள் வந்த தகவல் தெரியாமல் போனது. மேலும் யாரிடமும் அலைபேசி இல்லாததால் குடும்பத்தினரையும் தொடர்புகொள்ள முடியாமல் திண்டாடி உள்ளனர்.
இதனிடையே விமான நிலைய அதிகாரிகள் இவர்கள் நிலை அறிந்து இவர்களை ஓய்வு அறையில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீனவ கூட்டமைப்பினர் கேப்டன் சஞ்சய் பிரசார் உதவியுடன் அவர்களை அந்தமான் அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே மத்திய அரசு மற்றும் தமிழக அரசும் அந்தமான் அரசும்உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு மியான்மார் சிறையில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் அந்தமான் மீனவர்களை ஊருக்கு அழைத்து வந்து சேர்க்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காதவாறு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.