தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் உலக எய்ட்ஸ் தினம் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்களும் இன்று எடுத்துக்கொண்டனர்.
விழாவில் எச்.ஐ.வி தடுப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: எச்.ஐ.வி/எய்ட்ஸ் என்பது தனி மனித நோய் மட்டுமல்ல இது ஒரு பொது சுகாதார சமுதாய பிரச்சினை என்பதை உணர்வோம். எனவே நாம் அனைவரும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றி சரியான தகவலை முழுமையாக அறிந்திடுவோம். நாம் தெரிந்து கொண்டவற்றை நமது குடும்பங்களிலும் நமது சமுதாயத்திற்கும் தெரியப்படுத்துவோம்.
ஆரம்ப காலத்தில் எச்.ஐ.வ பற்றி பேசுவதற்கு அனைவரும் அச்சப்படுவார்கள். தற்பொழுது அதுபற்றிய விழிப்புணர்வு பெரும்பான்மையானவர்களுக்கிடையே இருக்கிறது. இது ஒரு முன்னேற்றமான செயல்பாடாக கருதப்படுகிறது.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவுதலை தடுக்க புதிய எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் அனைவருக்கும் இதைப்பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட தனிநபரையும் அவரது குடும்பத்தையும் எவ்வித பாகுபாடு இல்லாமல் அரவணைப்போம். அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளலாம். பாதிக்கப்பட்டோர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2021ம் வருட எய்ட்ஸ் தினக் கருத்து "எச்.ஐ.வி / எய்ட்ஸ்டன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவோம் - எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவோம்” என்னும் கருத்துக்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலர், துணை இயக்குநர் சுகாதார பணிகள் தூத்துக்குடி ச.பொற்செல்வன், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டி.நேரு, மருத்துவம், ஊரக நலப்பணிகள் (ம) குடும்ப நலம் இணை இயக்குநர் என்.முருகவேல், துணை இயக்குநர் (காச நோய் மையம்) தூத்துக்குடி க.சுந்தரலிங்கம், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவர் ஆர்.சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அகமது ஜான் புகைப்படக்காரர் சாதிக்