தூத்துக்குடி நகர் பகுதியில் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட ஆயுதப்படை முன்பு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார்.
முன்னதாக முககவசம் கட்டாயம் அனைவரும் அணிய வேண்டும் என்பதனை அறிவுறுத்தும் விதமாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு முககவசம், தலைக்கவசம் அணிதலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து முககவசத்தினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தினை இயக்குபவர்களுக்கு பாதுகாப்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்கள் தலைக்கவசம் மற்றும் முககவசம் அணிதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் சுமார் 100 இருசக்கர வாகனங்களுடன் ஆயுதப்படை முன்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கப்பட்டுள்ளது.
இப்பேரணி விவிடி சிக்னல், பழைய பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை வழியாக பனிமய மாதா சர்ச் வரை செல்லும். கடந்த வருடம் (2020ம் ஆண்டு) சாலை விபத்துகளால் நடக்கக்கூடிய விபத்தினை தடுப்பதற்கு ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல் துறை, போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல் துறை பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் மூலம் எந்தெந்த பகுதியில் விபத்து ஏற்படும் என கண்டறிந்து அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலைகளை மற்றும் சந்திப்பு பகுதிகளை மேம்படுத்துதல், போக்குவரத்து துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போக்குவரத்து காவல் துறை மூலம் சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்றைய தினம் தலைக்கவசம் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இந்த பேரணியானது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கைக்கோர்த்து பேரணியை நடத்தியுள்ளோம். இத்துடன் சேர்ந்து முககவசம் விழிப்புணர்வும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ஒமிக்ரான் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் குறித்த விழிப்புணர்வும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. இதுபோல ஒவ்வொரு மாதமும் சீட் பெல்ட், இருசக்கர வாகனங்களில் 3 நபர்கள் செல்வதை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்ற வருடத்தைவிட இந்த வருடம் சாலையில் ஏற்படும் விபத்தினை குறைக்கும் வகையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு செய்யும் ஒவ்வொரு விழிப்புணர்வினையும் பற்றி அறிந்துகொண்டு விபத்தினை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெலிக்ஸ்சன் மாசிலாமணி, தனபால், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனாஸ் கம்பெனி(வாகனம்), யங் இந்தியன்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#தூத்துக்குடி #மாவட்டஆட்சியர் #செந்தில்ராஜ் #வாகனபேரணி