4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை குண்டு வீசி தகர்த்து விடுவதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அனீஸ் என்ற பூலுடையார் (34). இவர் ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆம்புலன்சில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் பல முறை கேட்டும் சரிவர பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த அனீஸ் போதையில் சென்னையில் உள்ள மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்த்து விடுவேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து நாரைக்கிணறு போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில், அனீஸ் தான் மதுபோதையில் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனீசை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.
ஊதியம் வழங்காததால் மதுபோதையில் ஆட்சியர் அலுவலகத்தை குண்டு வீசி தகர்த்து விடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.