சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இன்று முதல் ஜனவரி 2 வரை (5 நாட்களுக்கு) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தலைஞாயிறு, கும்மிடிப்பூண்டியில் தலா 1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதுதவிர, சென்னை வானிலை ஆய்வு மையம் மூடுபனி எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனைஒட்டிய பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.