தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது தவறவிட்ட 5 பவுன் தாலி செயினை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவரின் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், அவர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.
கடந்த 23.12.2021 அன்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அங்கயற்கன்னி மற்றும் அவரது கணவர் மதுசூதனன் ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தபோது, அங்கு கடலில் குளிக்கும்போது மேற்படி அங்கயற்ககன்னியின் 5 பவுன் தாலிச்செயின் கடலில் அறுந்து விழுந்துள்ளது.
உடனே அங்கு இருந்த கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களான திருச்செந்தூர் கோட்டை தெருவை சேர்ந்த ஜான் (எ) சிவராஜா (38), த/பெ. சந்திரசேகரன் மற்றும் சரவணன் (34), த/பெ. ஜோசப் (எ) ரத்தினம் ஆகிய இருவரும் மேற்படி அங்கயற்கரசியின் கடலில் விழுந்த தாலிசெயினை 2 நாட்களாக கடலில் தேடி எடுத்து, கடந்த 25.12.2021 அன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கனகபாய் மூலம் தாலிசெயினின் உரிமையாளரான அங்கயற்கன்னியிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி தாலிசெயினை கடலில் தேடி எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த மேற்படி ஜான் (எ) சிவராஜா மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், இருவரையும் நேரில் அழைத்து, அவர்களை கௌரவித்து சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாரட்டினார்.