மகாத்மா காந்தியை அவதூறாகப் பேசியதற்காகவும், நாதுராம் கோட்சேவை ஆதரித்ததற்காகவும், கடந்த காலங்களில் வெறுப்புப் பேச்சுக்களை நிகழ்த்தியதற்காகவும் இந்து சாமியார் காளிசரண் மகாராஜ் மீது மகாராஷ்டிர அமைச்சர் ஜிதேந்திரா அவாத், தானேயில் உள்ள நௌபாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் அவர் மீது
ஐபிசியின் 294, 295, 506 & 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய இந்து துறவி காளிச்சரண் மகாராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்க முடியாது, மரணதண்டனை என்றாலும் எதிர்கொள்ளத் தயார் என்ற தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராய்பூரில் நடந்த இரண்டு நாள் தர்ம சன்சத் (மதக் கூட்டம்) என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் இந்து துறவியான அபிஜித் சரக் என்ற காளிச்சரண் மகாராஜ் கலந்துகொண்டார். இவர் மகாராஷ்ராவின் அகோலாவின் பழைய நகரப் பகுதியான சிவாஜி நகரில் வசித்துவருபவர்.
நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வின் போது, காளிசரண் மகாராஜ் மகாத்மா காந்திக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தர்ம சன்சத் நிகழ்வில் கலந்துகொண்ட காளிச்சரண், மகாராஜ், ''உண்மையான அர்த்தத்தில் பார்த்தால் கோட்சேதான் மகாத்மா. இந்து மதத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு தீவிர இந்துத் தலைவரை அரசு தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது ராய்பூரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அவரது கருத்துகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ''தேசத் தந்தையை அவதூறாகப் பேசியதன் மூலம் சமூகத்தில் விஷத்தைப் பரப்பி தனது நோக்கத்தில் வெற்றிபெற முடியும் என்று ஒரு நயவஞ்சகர் நினைத்தால், அது அவருடைய மாயை.'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் நேற்று (திங்களன்று) மகாராஷ்டிரா சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சர் நவாப் மாலிக், மாநில சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பி, மதத் தலைவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்'' என்று கோரினார். அதற்கு பதிலளித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், "காளிசரண் மகாராஜின் கருத்துகள் குறித்து அரசு அறிக்கை கேட்டு கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று கூறினார்.
திங்களன்று, மகாராஷ்ராவின் அகோலாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்திற்கு வெளியே மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி காளிச்சரண் மகாராஜுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் பிரசாந்த் கவாண்டே அளித்த புகாரின் அடிப்படையில் துறவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோட்வாலி காவல் நிலைய அதிகாரி இன்று தெரிவித்தார். வழக்குப் பதிவு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ''காளிச்சரண் மகாராஜ் மன்னிப்பு கேட்க முடியாது, இதற்காக மரணத் தண்டனையை ஏற்கவும் தயாராக உள்ளேன்'' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மஹாராஷ்டிர மாநில அமைச்சர் சாமியார் மீது புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.