மும்பையில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது.!டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் எச்சரிக்கை - ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை விதித்து மாநில அரசு உத்தரவு.!!


மும்பையில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதையடுத்து ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றும் உருமாறிய ஓமிக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 150 கொரோனா தொற்று  மட்டுமே பதிவாகி இருந்த சூழலில், மும்பையில் நேற்று ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மும்பையின் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட 82% அதிகமாகும். அதே போல் ஓமிக்ரான் தொற்று பாதிப்பும் அதிகரித்துள்ளது. 

இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையில் இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.மேலும் ஜனவரி 7ம் தேதி வரை உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கு மற்றும் வெளிப்புற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மும்பையில் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா 3வது அலை மும்பையில் தொடங்கிவிட்டதாக கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஷாஷங்க் ஜோஷி, மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,500 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 4 நாட்களாக கொரோனா கேஸ்கள் இரட்டிப்பாகி வருகின்றன.  டெல்டா வேரியண்டிற்கு பதிலாக ஓமிக்ரான் பரவி வருகிறது. மும்பையில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டது. 

மருத்துவமனைகளில் மோசமான நிலையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விரைவில் நாள்தோறும் மும்பையில் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் 6 வாரங்களில் ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்,என்றார்.

Previous Post Next Post