வேலுாரில் உள்ள, கூட்டுறவு பெண் இணைப்பதிவாளரிடம் கணக்கில் வராத 2. 45 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் ரேஷன் கடை ஊழியர்களிடம் அதிகளவு லஞ்சம் வாங்குவதாகவும், தற்போது புத்தாண்டு, பொங்கல் இனாம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் புகார்கள் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
வேலுார் மாவட்டம், வேலுார் அண்ணா சாலையில், நுகர் பொருள் வாணிய கழகம் சார்பில் நடத்தப்படும் கற்பகம் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இதன் மாடியில், கூட்டுறவு இணைப்பதிவாளர் மற்றும் கற்பகம் சூப்பர் மார்க்கெட் மேலாண்மை இயக்குனர் அலுவலம் உள்ளது.
இங்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த ரேணுகாம்பாள், 50, என்பவர் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் ஐந்து கற்பகம் சூப்பர் மார்க்கெட், 70 ரேஷன் கடைகள், பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளன. இவர் ரேஷன் கடை ஊழியர்களிடம் அதிகளவு லஞ்சம் வாங்குவதாகவும், தற்போது புத்தாண்டு, பொங்கல் இனாம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று இரவு 7:00 மணிக்கு இங்கு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.அதில் இரவு 8:00 மணி நிலவரப்படி இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் வைத்திருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.ரேஷன், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.