வேலுார்:ரூ.2.27 கோடி லஞ்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், வேலுார் பொதுப்பணித்துறை பெண் செயற் பொறியாளர் ஷோபனா கைது செய்யப்பட்டு மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்தவர் ஷோபனா, 57.வேலுாரில் உள்ள, பொதுப்பணித்துறையின், மண்டல தொழில் நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வந்தார்.வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, கடலுார், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்கள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னில் கல்லுாரிகளில் கட்டுமானம் பணிகளுக்கு டெண்டர் கொடுத்து நிதி ஒதுக்குவது, பணிகளை ஆய்வு செய்வது அவரது வேலையாகும்.
இவர் அதிகளவு லஞ்சம் வாங்கி வருவதாகவும், தீபாவளியையொட்டி மாமுல் பணம் வசூல் செய்து வருவதாக வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வேலுார் டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், வியஜலட்சுமி, விஜய் ஆகியோர் கொண்ட 12 பேர் குழுவினர் கடந்த 3, 4 ம் தேதிகள் அவரது வேலுார் அலுவலகம், ஒசூரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தி கணக்கில் வராத 2.27 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.அவர் மீது வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். துறை ரீதியான விசாரணைக்கும் பரிந்துரை செய்தனர். ஆனால் அவர் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துறையை கண்டு கொள்ளாமலும், துறை ரீதியாக விசாரணை நடத்தாமலும், சஸ்பெண்ட் கூட செய்யாமலும், பொதுப்பணித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் ஷோபனாவை தப்பிக்க விடும் நோக்கில் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை ஒசூரிலும், மாலை வேலுாரிலும் ஷோபனாவிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அதில் அவர் லஞ்சம் வாங்கியதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்தது.இதனால் ஷோபனாவை இரவு 6:00 மணிக்கு கைது செய்தனர். பின் வேலுார் அரசு மருத்துவமனையில் உடல் நல பரிசோதனைக்கு பிறகு வேலுார் மகளிர் சிறையில் அடைத்தனர்.
ஷோபனாவின் வங்கி கணக்குகள், லாக்கர்கள் முடக்கப்பட்டது. அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் மொத்த மதிப்பு குறித்து ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், அவர் லஞ்சம் வாங்கியதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்