தூத்துக்குடியில் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலியாக பொது அதிகாரப் பத்திரம் எழுதி, அதன் மூலம் கிரையப்பத்திரம் பதிவு செய்து, 20 லட்சம் மதிப்புள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டணம் பகுதியை சேர்ந்தவர் குரூஸ் பெர்னான்டோ மகன் ஜோசப் சேவியர் நேரியஸ் என்பவர் தற்போது இலங்கை, கொழும்பில் குடியிருந்து வருகிறார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து 1992ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குமாரகிரி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை கிரையமாக வாங்கி தங்களுக்குள் பிரித்து அனுவித்து வந்துள்ளனர்.
மேற்படி நிலத்தில் ஜோசப் சேவியர் நேரியஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தை மோசடியாக அபகரிக்க வேண்டும் எண்ணத்தில் திருநெல்வேலி பேட்டை பகுதியை சேர்ந்த தக்கா பிச்சை மகன் ரஹ்மத்துல்லா (43) என்பவர் தூத்துக்குடி புதுக்கோட்டையில் உள்ள மேற்படி 2 ஏக்கர் நிலத்தை,
தனக்கு சொந்தமான திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் பகுதியிலுள்ள 1 செண்ட் நிலத்தோடு சேர்த்து 2019ம் ஆண்டில் திருநெல்வேலி பேட்டை சார்பதிவாளர் அலுவகத்தில் மேற்படி ஜோசப் சேவியர் நேரியஸ் என்பவரின் பெயரில் ஒருவைர வைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பதிவு செய்து
தூத்துக்குடி ஒட்டநத்தம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகன் கண்ணன் (எ) கருப்பசாமி மற்றும் தூத்துக்குடி மீளவிட்டான் சிவந்தான்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அன்பழகன் ஆகியோருக்கு மோசடியாக கிரையம் எழுதி கொடுத்துள்ளனர்.
பின்னர் மேற்படி கண்ணன் (எ) கருப்பசாமி என்பவர் அன்பழகன் என்பவருக்கு பொது அதிகாரம் எழுதிகொடுத்துள்ளார். இதில் மோசடி விவரம் தெரிந்தே தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மாரி மகன் அசோக் மற்றும் ஒட்டநத்தம் பகுதியை சேர்ந்த சண்முகசாமி மகன் உதயகுமார் ஆகியோர்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்.
பின்பு மோசடியாக பதிவு செய்த நிலத்தை பொது அதிகாரம் வாங்கிய அன்பழகன் என்பவர் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த பட்டுச்சாமி மகன் விஜயகுமார் என்பவருக்கு 2020ம் ஆண்டில் கிரையம் செய்து கொடுத்துள்ளார். மேலும் இந்த மோசடி செயலுக்கு தூத்துக்குடி புதுப்பச்சேரி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் வள்ளித்துரை (35) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
தனது நிலம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜோசப் சேவியர் நேரியஸ் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத்க்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, உதவி ஆய்வாளர்கள் காமராஜ், விஜயகுமார், தலைமைக் காவலர் தாமஸ் மற்றும் காவலர் சித்திரைவேல் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டு கடந்த 13.10.2021 அன்று வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை தேடி வந்த நிலையில் கடந்த 16.11.2021 அன்று மேற்படி மோசடி செயலில் ஈடுபட்ட ரஹ்மத்துல்லா என்பவரை திருநெல்வேலியிலும், வள்ளித்துரை என்பவரை தூத்துக்குடி பகுதியிலும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் மோசடியில் ஈடுபட்ட கண்ணன் (எ) கருப்பசாமி (46), த/பெ. சண்முகநாதன், ஒட்டநத்தம், ஓட்டபிடாரம், தூத்துக்குடி என்பவரை மேற்படி தனிப்படையினர் இன்று (30.12.2021) கைது செய்தனர்.