அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்கரன், ஆடிட்டர். இவரது தாய் சுதா, பெரியம்மா லதா, பாட்டி ரஜிதா ஆகியோர் கடந்த 17ம்தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கினர். அப்போது மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 பேரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வியாசபுரத்தை சேர்ந்த சின்னராசு(23), மற்றும் பிளஸ்2 படிக்கும் 17 வயது மாணவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஆடிட்டர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையடித்த வழக்கிலும், அரக்கோணம் அருகே உள்ள பாலவாய் வங்கி ஊழியர் ஆனந்தகிருபாகரன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கிலும் சின்னராசு மற்றும் பிளஸ்2 மாணவனுக்கு தொடர்பு உள்ளது.
இந்த வழக்கில் வேறு யார், யாருக்கு தொடர்புள்ளது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து துப்பாக்கி, 2 வீச்சரிவாள், 2 செல்போன், பைக், லேப்டாப், டிவி, கேமரா மற்றும் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், கைப்பற்றப்பட்ட நகை கவரிங் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் நகைகள் உள்ளதா என விசாரித்து வருகிறோம். மேலும், இவர்கள் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் ரகத்தை சேர்ந்த துப்பாக்கி, அதில் பயன்படுத்திய 450 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த துப்பாக்கி வங்கி ஊழியர் ஆனந்த கிருபாகரன் வீட்டில் கொள்ளையடிக்கும்போது திருடிச்சென்றது தெரியவந்தது. இவர்கள் யூடியூப்பை பார்த்து துப்பாக்கியால் சுடுவது எப்படி என்பது குறித்து கற்றுக்ெகாண்டுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.