அரியலூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில், அம்பாபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கும், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவனின் வீட்டுக்கு தெரியவர, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
பிளஸ் டூ முடித்த அந்த மாணவன், அண்மையில் கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகிலிருக்கும் மூங்கில் பாடி கிராமத்தில் அந்த மாணவனின் உறவினர் வீட்டுக்கு இருவரும் சென்றிருக்கின்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லாததால், இருவரும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.திருமண விவகாரம் மாணவனின் வீட்டாருக்கு தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையில், தங்கள் காதலை யாரும் ஏற்று கொள்ளாததால் இருவரும் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் அந்த ஆசிரியை உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால், உயர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மாணவனின் குடும்பத்தினர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மாணவனுக்கு 18 வயது ஆவதற்கு சில மாதங்கள் உள்ளதாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் தற்போது அந்த ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தினமும் ஒரு புகார் எழுந்து வரும் நிலையில், போக்சோ சட்டத்தில் ஆசிரியை கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.