வானிலை ஆய்வு மையத்தின் ரேடாரை சரி செய்ய மதுரை எம்.பி வெங்கடேஷன் கோரிக்கை !


சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாமல் இருக்கிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,” கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது. எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு நாம் தயாராக இருப்பது பேரிடர் காலங்களில் அறிவுப்பூர்மானது.  கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பலமுறை பழுதாகியுள்ள இந்த ரேடார் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட வேலை செய்யாமல் உள்ளது. இதனை சரி செய்வதில் கூட அலட்சியம் உள்ளது. இப்போதுதான் உதிரி பாகங்களுக்கான பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளமுடிகிறது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ரேடார் செயல்படுவதை உறுதிபடுத்த கோரிக்கை விடுத்துள்ளேன். 

பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் உடனடியாக புதிய ரேடார் ஒன்றை சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய புவி அறிவியல் செயலாளர் கடந்த ஆண்டே புதிய ரேடார் சென்னையில் பொறுத்தப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை புதிய ரேடார் அமைக்கப்படவில்லை.

இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வியலோடு சம்மந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்” என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள்  மதுரை எம்.பியை  தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சென்னைத் துறைமுகத்திலுள்ள ரேடாரை பழுது நீக்கும் பணி நடப்பதாகவும் விரைவில் செயல்பாட்டிற்கு வருமெனவும் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழை காலத்தில் முக்கிய ரேடார் வேலை செய்யாமல் போனது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தற்போது ஸ்ரீஹரிகோட்டா மற்றும் காரைக்காலில் உள்ள ரேடார்கள் உதவியுடன் மழை முன்னறிவுப்புகளை வழங்கி வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Previous Post Next Post