தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையேட்டினை சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிமுகம் செய்து வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள், மற்றும் இளம்பெண்களுக்கு மன ரீதியான, உடல் ரீதியான பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் அளிப்பதற்காக 63748 10811 என்ற தனி வாட்ஸ்அப் எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், ``தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் குழந்தைகள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தங்களுக்கு ஏதாவது பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால் அது குறித்துப் புகார் அளிக்க 1098 என்ற எண் இருக்கிறது. அதே போல, பள்ளி மாணவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க, 14417 என்ற எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் புகார் அளிக்கும் பெண்களின் பெயர், பெற்றோர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரகசியமாகக் காக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் மற்றும், இளம்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மன ரீதியான, உடல் ரீதியான பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிப்பதற்காக 63748 10811 என்ற தனி வாட்ஸ்அப் எண் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் 18 வயதிற்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிப்பதற்கு தனித்தனி வாட்ஸ்அப் எண்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த எண்களில், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏதாவது பாலியல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தல் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம்.
அந்தப் புகார்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களுடைய பிரச்னைகளை ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஒளிவுமறைவில்லாமல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்கக் கூடாது” என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபிபர்ணாண்டோ,
திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா மேட்டோ, பட்டதாரி ஆசிரியர் அன்புமலர், இன்னர்வீல் கிளப் ஆப் தூத்துக்குடி தலைவர் மரியா சேவியர்ஜூடி, இன்னர்வீல் கிளப் ஆப் தூத்துக்குடி திட்ட ஒருங்கிணைப்பாளர் லீனாமகிமை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.