கோவை மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அத்துடன் மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் ''யாரையும் சும்மாவிடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது" என்று எழுதியிருந்தார். இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை நேற்று இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்தபின் , நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியின் முதல்வர் மீராவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவியின் வீட்டின் முன்பாக உறவினர்களும் சக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்படும் வரை மாணவி உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் உக்கடம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடங்க இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.