மானாவாரி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய உரிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


மானாவாரி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய உரிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகையை காலதாமதமின்றி உரிய நேரத்தில் வழங்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. உடனடியாக விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வருவாய் துறையினரிடம் இருந்து பயிர் அடங்கல் இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்பதால், மானாவாரி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி நவம்பர் 15 என்பதை நவம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். 

மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 

உழவர் பாதுகாப்பு அட்டை விவசாயிகளுக்கு வழங்க கிராமங்களில் முகாம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் ஏ.நம்பிராஜன், மாவட்ட தலைவர்கள் டி.எஸ்.நடராஜன், வெள்ளத்துரை, புதூர் ஒன்றிய தலைவர் வேலுச்சாமி, அவைத்தலைவர் ஜி.வெங்கடசாமி, மாவட்ட துணை தலைவர் எம்.சாமியா, எட்டயபுரம் ஒருங்கிணைப்பாளர் ஏ.பாலமுருகன், விளாத்திகுளம் தலைவர் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post