திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா நாளை (9ம்தேதி) நடக்கிறது.
அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 4ம் தேதி துவங்கியது.
விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவின் 4ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்டஅபிஷேகம் நடந்தது.
நாளை சூரசம்ஹாரம்: விழாவின் 6ம் நாளான நாளை (9ம் தேதி) அதிகாலைஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல்சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார்.
பின்பு கோயில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனைவதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
திருக்கல்யாணம்: 7ம் திருவிழாவான நாளை மறுநாள் (10ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு : சூரசம்ஹாரம் நடக்கும் தினமான நாளை மற்றும் திருக்கல்யாணம் நடக்கும் தினமான நாளை மறுநாளும் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை. இரு நாட்கள் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
15 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுக்கின்றனர்.