திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதையடுத்து பொதுமக்கள் அதிச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி சார்பில் நோய்த்தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கோர தாண்டவமாடிய கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக கோவை மருத்துவமனையில் கடந்த 13 ந்தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு எச்1 என்1 என்று அழைக்க கூடிய பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தாருக்கும் சோதனை செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பட்டி கூறுகையி, ‘ கடந்த 13 ந்தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு எச்1.என்1 உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமாக இருப்பதுடன் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்’ என்றார். கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் மற்றுமொரு சோதனையாக பன்றிக்காய்ச்சல் பரவுவது திருப்பூர் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில், ‘15 வேலம்பாளையம் பகுதியில் நோய் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 4 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 31 பேருக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வேறு யாருக்கும் நோய் பரவல் ஏதும் இல்லை. தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களுக்கு 10 நாட்களுக்கு டாமிபுளூ மாத்திரைகள் வழங்கப்பட்டது. என்றார்.
மருத்துவ முகாமில் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கோகுல்நாதன் மற்றும் மாநகராட்சி டாக்டர்கள் பங்கேற்றனர்.