திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவி எம்.ஹரிணி புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமம் நடத்திய வினா விடை வேட்டை போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என 4 மண்டல அளவில் நடந்த இந்த போட்டியில் மேற்கு மண்டல அளவில் தேர்வாகி பின்னர் இறுதிபோட்டிக்கு முன்னேறினார். 4 மண்டலங்களில் இருந்து தேர்வான 8 பேர்களில் எம்.ஹரிணி மாநில அளவில் முதல் பரிசைப் பெற்றுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு சென்னையில் நடந்த விழாவில் கொங்கு பள்ளி மாணவி எம்.ஹரிணிக்கு கேடயம், டிராபி, சான்றிதழ், பரிசுகூப்பன் மற்றும் பல்வேறு வகையான பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். இந்த வினா விடை வேட்டை போட்டியில் கலந்துகொண்டு மாநிலஅளவில் முதல் பரிசு பெற்ற மாணவி எம். ஹரிணியை பள்ளியின் தலைவர் ஏ.கே.சி தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், தாளாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சந்திரசேகர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.