திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான ஆசிரியர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
ஆங்கில ஆசிரியர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கூறி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டனர்.
"பாலியல் தொல்லையால் உயிரிழப்பது நானே கடைசியாக இருக்க வேண்டும்" என கடிதம் எழுதி வைத்து விட்டு இன்னொரு மாணவி கரூரில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில்
திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது அமரபூண்டி கிராமம். இங்கே அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்
நந்தவனப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாட்ராயனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு வயது 30. இந்நிலையில் அதே படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கு, ஆசிரியர் நாட்ராயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை வெளியில் சொல்ல முடியாமலும், பெற்றோரிடம் சொல்ல பயந்து கொண்டும் மாணவி தவித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவியை விடாது துரத்திய ஆசிரியர் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பலமுறை மாணவியை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாடம் குறித்த சந்தேகம் கேட்க ஆசிரியர் வீட்டிற்கு செல்வதாக மாணவியும் கூறியதால் பெற்றோர் சந்தேகப்படவில்லை.
ஆனால் மற்ற மாணவிகளை விட தன்னுடைய மகள் மட்டும் அடிக்கடி ஆசிரியர் வீட்டிற்கு செல்வது ஏன் என பெற்றோர் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் திரும்ப திரும்ப விசாரிக்க மாணவி பெற்றோரிடம் உண்மையை ஒத்துக்கொண்டார்.
தன்னை ஆசிரியர் திருமணம் செய்ய விரும்புவதாகவும், அதனால் அடிக்கடி தன்னை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆங்கில ஆசிரியர் நாட்ராயன் மீது பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாணவியிடம் தீவிர விசாரணை செய்த போலீசார் நாட்ராயன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் நாட்ராயன் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.