தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் யூரியா இருப்பு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் ஆய்வு.!


தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருக்கும் யூரியா இருப்பு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.செந்தில்ராஜ்,  இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பயிர் சாகுபடிக்கு முக்கியமாக தளைச்சத்து, மடிச்சத்து, சாம்பல் சத்து தேவைப்படுகிறது. 

தளைச்சத்து என்பது நைட்ரஜன் அது முக்கியமான ஒன்றாகும். தளைச்சத்தின் மூலமாகத்தான் பயிர்கள் நன்கு வளரும். தளைச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய உரம்தான் யூரியா உரமாகும். இந்த யூரியா உரத்தில் 46 சதவிதம் நைட்ரஜன் உள்ளது. 

யூரியா உரத்தினை ஸ்பிக் நிறுவனமானது வருடத்திற்கு 6,00,000 லட்சம் மெட்ரிக் டன் தயாரித்து வருகிறது.  ஸ்பிக் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் மத்திய அரசால் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உரங்கள் தமிழ்நாட்டிற்கு 60 சதவிதம்  ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பிரித்து வழங்கப்படுகிறது. மேற்படி மாவட்டங்களுக்கு வழங்கப்படும் உரங்கள் ஸ்பிக் நிறுவன முகவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 3000 மெட்ரிக் டன் தானியங்கி இயந்திரம் மூலம் பேக்கிங் செய்யும் அனைத்து மூடைகளும் லாரி மூலமாகவும், ரயில் மூலமாகவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

துரிதமாக செயல்படுவதற்கு இந்நிறுவனத்திற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். இந்நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்கள் உள்ளனர். மேலும் பணியாளர்கள் தேவையென்றால் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் இந்த ரவி பருவத்தில் 1,72,000 ஹெக்டேர் விவசாயிகள் பயிரிட்டுள்ளார்கள். இதில் 1,60,000 ஹெக்டேர் மானாவாரி பயிரான சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளார்கள். மேலும் நெல் உள்ளிட்டவைகள் தாமிரபரணி பகுதியில் பயிரிட்டுள்ளார்கள். ரவி பருவத்திற்கு மட்டும் 12500 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.

நவம்பர் மாதத்திற்கு யூரியா  5000 மெட்ரிக் டன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் தேவைப்படும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத்திற்கும் யூரியா ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் போதுமானதாக கிடைக்கிறது.  

தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் யூரியா 33000 மெட்ரிக் டன்கள், டிஏபி 8250 மெட்ரிக் டன்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் 9610 மெட்ரிக் டன்கள் நடப்பு நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேற்படி ஆய்வில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம் மற்றும் ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் ராமகிருஷ்ணன்,  பொது மேலாளர் செந்தில்நாயகம், உதவி இயக்குநர் வேளாண்மை உரம் கண்ணன், வட்டாச்சியர் ஜஸ்டின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post