தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.!


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் செந்தில்ராஜ்,  தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். 

மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்” என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 

மேலும், இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் மனு செய்த ஒரு பயனாளிக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ஜவுளி வியாபாரம் செய்வதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வன அலுவலர் அபிசேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்மலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post