தூத்துக்குடி துறைமுகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது.!


தூத்துக்குடி மாவட்டம், நடுச்செக்காரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த நயினார் மகன் பெருமாள் (36) என்பவர் முதுநிலை பட்டதாரி ஆவார். இவர் தற்போது பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தூத்துக்குடி மாவட்டம், 

தெற்கு சிலுக்கன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துக்குமார் (31) என்பவர் தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், அதை பயன்படுத்தி தூத்துக்குடி துறைமுறைகத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று ஆசை வார்த்தை கூறி பெருமாளிடம்

கடந்த 12.12.2020 முதல் 25.02.2021 வரை ரொக்கமாக ரூபாய் 3,50,000/-மும், பின் வங்கி கணக்கு மூலம் ரூபாய் 6,00,000/- ஆக மொத்தம் ரூபாய் 9,50,000/- பணம் வாங்கியுள்ளார். பின்னர் பெருமாள் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று பணத்தை திருப்பித்தருமாறு முத்துக்குமாரிடம் கேட்டதற்கு, அவர் பணத்தை திருப்பித்தரவில்லை. 

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த பெருமாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில்  தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத்  மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதா ராணி  தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்த முத்துக்குமாரை கைது செய்தனர்.

வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் தாங்கள் படித்த படிப்பின் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது போன்று அரசு வேலை வாங்குவதற்கு பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post