தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளறுபடி செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என தமிழக மீனவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பெர்டின் ராயன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
தொடர்ந்து மாநில செயலாளர் பெர்டின் ராயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் துவங்கிய நாள் முதல் இன்று வரை பொது மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இத்திட்டத்திற்கு ஆயிரத்து 48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67 திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளது.
ஆனால் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பிரையண்ட் நகர் 12வது தெருவில் ஏற்கனவே கட்டப்பட்ட மழை நீர் வடிகால் வேலை நடைபெறுவது பொது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மழைநீர் வடிகால் வேலை நடைபெறும் பட்சத்தில் பழைய மழைநீர் வடிகால் பணி நிறுத்தப்பட்டதன் காரணமும், பழைய மழைநீர் வடிகால் தவறுதலாக ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தகாரர் கட்டி இருந்தால் அதற்கான தொகை பிடித்தம் செய்யப்பட்டதா என்பதும்
புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்ட திட்ட தொகை என்னவென்றும் பொதுமக்களுக்கு ஒரு பெரும் குழப்பம் நிலவுகிறது ஆகவே இரட்டை மழைநீர் வடிகால் குறித்து பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் என கூறினார்
நிகழ்வில் மாநில தலைவர் ராஜசேகர் பர்னாந்து, தூத்துக்குடி மாவட்ட தலைவர் செந்தில் சுரேஷ்,நெல்லை மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.