(இந்த செய்தியில் உள்ள புகைப்படம் உங்களுக்கு மன சங்கடத்தை ஏற்ப்படுத்தலாம்)
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூடலூரைச் சார்ந்த சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை முன் விரோத காரணமாக பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மதன் (35) இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.மதன் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மதன் இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நீதிமன்றத்திலிருந்து பைபாஸ் பகுதிக்கு இன்று நண்பகல் நேரத்தில் வந்துகொண்டிருந்தபோது, உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே திடீரென ஒரு பொலிரோ வாகனமொன்றில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதன் மீது பலமாக மோதி கீழே தள்ளி உள்ளதாகவும், பின்னர் அந்த காரில் இருந்து 4க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இறங்கி மதனை அரிவாளால் தாக்கியுள்ளதாவும் கூறப்படுகிறது.
இதில் தலை, வாய்ப்பகுதி போன்ற பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் மதன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பின்னால் வந்த வழக்கறிஞர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக ரத்த காயத்துடன் மதனை ஆட்டோவில் ஏற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். ஆனால் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மதன் உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து உத்தமபாளையம் காவல்துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வழக்கறிஞர் தாக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.பின்னர் இது தொடர்பாக உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட மதன் கடந்த 2020 ஆம் தேதி மார்ச் மாதம் உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி அருகே உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றின் முன்பாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களின் இவரும் ஒருவர் ஆவார்.
இந்நிலையில் உத்தமபாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முதல்கட்ட தகவலாக முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் எனவும், குள்ளப்ப கவுண்டன்பட்டி யைச் சார்ந்த ரஞ்சித் குமாரின் உறவினர்கள் நான்கு பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மதனின் உடலை பிரேத பரிசோதனை உத்தமபாளையம் மருத்துவமனையிலேயே செய்ய வேண்டும் எனவும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடாது எனக்கூறி இறந்த வழக்கறிஞரின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் வழக்கறிஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது
பட்டப்பகலில் பழிக்குப்பழி வாங்கும் விதமாக நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.