குஜராத் மாநிலத்தில் சாலையோர அசைவ டிபன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் உணவுகள் சிற்றுண்டிகளாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்வதால், மக்கள் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த அசைவக் கடைகளால் சாலைகளில் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது, முக்கியமாக மக்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.
சாலையோர அசைவ உணவு வண்டிக் கடைகளை தடை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை ராஜ்கோட், வதோதரா மற்றும் பாவ்நகர் மாநகராட்சிகள் உடனடியாக அமலுக்குக் கொண்டுவந்துள்ளன.
இதைத் தொடர்ந்து அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் இன்று சாலையோர கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. இதற்காக மாநகராட்சி டிரக்குகள் சாலைகளைக் கண்காணித்து நகரை வலம் வந்தன. சாலையோர அசைவ டிபன் வண்டிக் கடைகள் பறிமுதல் செய்து டிரக்கில் ஏற்றப்பட்டன.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் 100 மீட்டர் சுற்றளவில் அசைவ உணவுகளை சிற்றுண்டி கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத தெரு வியாபாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.