திருப்பதியில் நடைபெற்ற தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில், 'தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும்,' எனவும், 'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில் 29வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது. எனவே, தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். தமிழகத்தின் மின் உற்பத்தி திட்டங்கள் பலவற்றுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. அதேநேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற வழக்குகள், பகைமை உணர்வு ஆகியவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும். இத்தகைய பிரச்னைகளுக்கு அன்பெனும் பொது மொழி கொண்டு தீர்வு கண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோம். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த உரையினை பொன்முடி வாசித்தார்.